தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 4 தென்மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கர்நாடகத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் பிரதமர் மோடி, பெங்களூருவில் கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனகதாசர் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு வெள்ளிக்கிழமை மரியாதை செலுத்துகிறார்.
இதைத் தொடர்ந்து, பெங்களூரு வழியாக சென்னை- மைசூரு இடையே இயக்கப்படவுள்ள தென்னகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை அவர் கொடியசைத்து தொடக்கிவைக்கவுள்ளார். பின்னர், 5,000 ரூபாய் கோடி செலவில் கட்டப்பட்ட பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தின் 2ஆவது முனையத்தையும், பெங்களூருவில் கெம்பே கௌடாவின் 108 அடி உயர வெண்கல சிலையையும் பிரதமர் திறந்துவைக்கவுள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 36ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார்.
தனது பயணத்தின் 2ஆவது நாளான சனிக்கிழமை ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.. ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் இடையே 3,750 கோடி ரூபாயில் அமைக்கப்படும் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு (6 வழிச்சாலை) அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர், தெலங்கானாவுக்கு செல்லும் பிரதமர், ராமகுண்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட யூரியா உரத் தொழிற்சாலையை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார்.