காருண்யமுள்ள தேவனாம்பிரியராகிய அரசர்பெருமானுடைய (அசோகருடைய) ஆட்சிக்குட்பட்ட எல்லாவிடங்களிலும், இவ்வெல்லைக்கு அப்பாற்பட்ட சோழ, பாண்டிய, சத்தியபுத்திர, கேரளபுத்திர தேசங்களிலும், தாமிரபரணியிலும் (இலங்கை), யவன அரசனாகிய அண்டியொகஸ் ஆட்சிசெய்யும் தேசத்திலும், அதற்கப் பாற்பட்ட தேசங்களிலும் காருண்யமும் மேன்மையும் பொருந்திய அரசரால் இரண்டுவித மருத்துவ சிகிச்சைகள் ஏற்படுத்தப்பட்டன.
அவை, மக்களுக்கு மருத்துவம், கால்நடைகளுக்கு மருத்துவம் என்னும் இருவகை மருத்துவ நிலையங்களாம்’ என்ற வாக்கியங்கள் அண்மையில் சௌராஷ்டிர தேசத்திலுள்ள கிர்னார் நகரத்துகருகில் உள்ள பாறையொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது மௌரிய வம்சத்தின் தலைசிறந்த அரசரான அசோகச் சக்கரவர்த்தியால் எழுதப்பட்ட அசோக சாசனம் என்று தொல்லியல் ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சாசனமானது, இந்தியாவில் பௌத்தத்தின் தொன்மத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது. கௌதம புத்தர் இறந்து 150 ஆண்டுகளில் அவருடைய போதனைகள் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. சுமார் கி.மு 262 ஆண்டு மௌரியச் சக்ரவர்த்தி அசோகர் பௌத்த மதத்தைத் தழுவி அவரது இராஜ்ஜியம் முழுவதும் பௌத்த மதம் பரவ வழி வகுத்தார்.
பெரும்பாலான மக்கள் பௌத்தத்தின் உயர்ந்த ஒழுக்க நியதிகளாலும், அது இந்து சமயச் சாதீய அமைப்பைத் தீவிரமாக எதிர்த்ததாலும் அதன்பால் ஈர்க்கப் பட்டனர். அசோகச் சக்ரவர்த்தியும் ஒரு மாபெரும் ஆலோசனைச் சபையைக் கூட்டிப் பௌத்த மதத்தைப் பரப்பப் பௌத்தத் துறவிகளைப் பல குழுக்களாக அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது தொலைதூரத்திலுள்ள ஐரோப்பாவரைக்கும் அனுப்பி வைத்தார்.
அவற்றுள் இலங்கைக்குச் சென்ற பௌத்த துறவிகள் அங்கு பௌத்தத்தினை நிலை நிறுத்தினார்கள். அதுமட்டுமன்றி பௌத்த மதத்தைப் பரப்ப இந்தியாவின் தென் பகுதிக்கும், மேற்குப் பகுதிக்கும், காஷ்மீரத்திற்கும், தென் பர்மாவிற்கும், தாய்லாந்திற்கும் துறவிகள் குழுக்கள் அனுப்பப்பட்டன. ஒரு நூற்றாண்டுக்குப் பின் ஆப்கானிஸ்தானும், வட இந்தியாவின் மலைப் பிரதேசங்களும் பௌத்த மதத்தைப் பின்பற்றியமைக்கான சான்றுகள் நிறையவே உள்ளன.
தொடர்ந்து பௌத்த துறவிகளும் வர்த்தகர்களும் மத்திய ஆசியாவிற்கும் இறுதியாகச் சீனாவிற்கும் பௌத்தத்தைக் கொண்டு சென்றனர். சீனாவிலிருந்து பௌத்தம் கொரியாவிற்கும் ஜப்பானிற்கும் பரவியது. பிற நாடுகளிலிருந்து சீனாவில் நுழைந்த பல்வேறு கருத்துக்களுள் பௌத்தம் மட்டுமே அங்கு வேர் விட்டு நிலைத்து நிற்கின்ற என்பது வரலாறு.
அதேநேரம், பௌத்தம், தன்னை எதிர் கொண்ட பிற மதங்களை அடக்கி ஒடுக்கியதாகவோ, படைபலத்தால் வெற்றி கொண்டு பௌத்தம் பரப்பப் பட்டதாகவோ கூறப்படும் நிகழ்ச்சிகள் மிகக் குறைவே. பௌத்தம் சாந்தமான வாழ்க்கை முறையைப் போதிப்பதால், கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்வதென்ற எண்ணமே பௌத்தர்களுக்கு முரண்பட்டதாக காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில், இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியிலிருந்து பௌத்தம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. 1956 ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் பாபா சாகேப் அம்பேத்கார் அவரது மக்கள், சாதிப் பாகுபாட்டால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காரணத்தினால், அதிலிருந்து விலகிப் பௌத்தத்தைத் தழுவினார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 80 இலட்சம் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினார்கள். இந்த எண்ணிக்கை இன்றும் வளர்ந்து கொண்டே போகிறது.
குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி பதவியைப் பெற்றதிலிருந்து, பௌத்த சமயத்தின் வளர்ச்சிக்குரிய முழுமையான ஒத்துழைப்புக்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்கி வருகின்றார்கள்.
அதுமட்டுமன்றி, அவர் பௌத்தத்தின் பால் உள்ள அயல்நாடுகளிலும், பௌத்த சமய மேம்பாட்டுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார். மேலும் அந்த நாடுகளில் உள்ள சமயத்தலைவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து ஒருங்கிணைப்புச் செய்பாடுகளிலும் பாரம்பரிய ரீதியாக உள்ள வரலாற்று, கலாசார உறவகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைச்சாத்தியமாக்கி வருகின்றார்.
அண்மையில், பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேபாளத்திற்குச் சென்றிருந்ததோடு, பௌத்த மத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர் இருக்கை அமைப்பது குறித்து லும்பினி பௌத்த சமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேரவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு வித்திட்டிருந்தார்.
அத்துடன் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாசார உறவுகள் பேரவைக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டதோடு காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேரவை இடையே மற்றுமொரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாடுகள் அவர் பௌத்த சமயத்தின் பண்பியல் மீது கொண்டிருந்த பற்றினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதேபோன்று, இலங்கையிலும் பௌத்த சமயத்திற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு பிரதமர் மோடியின் சிந்தனையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனைப் பாராட்டும் வகையில், பௌத்த தத்துவக் கருத்துக்கள் முழு உலகத்திற்கும் எல்லா நேரங்களிலும் சரியானவை மற்றும் மிகவும் பொருத்தமானவை என்றும், பௌத்தத்தை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் குறித்து மகா சங்கத்தினர் பெரிதும் பாராட்டத்தக்கது என்றும் இலங்கையின் பௌத்த பீடாதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
இலங்கையுடன் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்கான விசேட நன்கொடையாக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவித் திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்ததுடன் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையானது வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்டது.
பௌத்த மதத்துடன் தொடர்புடைய பல்வேறு விடயங்களின் அடிப்படையில் கூட்டாக அடையாளப்படுத்தப்பட்ட முன்னுரிமைத் திட்டங்களை துரிதமாக அமுலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.