நீதிமன்றத்தின் அனுமதியின்றி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று (வெள்ளிக்கிழமை) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சரின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பொய்யான தகவல்களை வழங்கி பெறப்பட்டுள்ளதாக தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் கமகே பல தவறுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும் எனவே அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த தடை உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற அதிகாரிகளுக்கு நீதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் கமகே இரட்டைக் குடியுரிமையைக் கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை டிசம்பர் 15 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு சிஐடிக்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.