முக்கிய தெற்கு நகரத்தில் இருந்து முழுமையாக வெளியேறியதாக ரஷ்யா கூறியதை அடுத்து, உக்ரைனிய துருப்புக்களை, அப்பகுதியில் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
வீதிகளில் உள்ளூர் மக்கள், உக்ரைனின் தேசியக் கொடியை பறக்கவிட்டு, துருப்புக்கள் வரும்போது கோஷமிட்டதை வெளியான காணொளிகளில் அவதானிக்க முடிந்தது. சிலர் இரவு முழுவதும் தேசபக்தி பாடல்களைப் பாடினர்.
கடந்த பெப்ரவரி படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட ஒரே பிராந்திய தலைநகரம் கெர்சன் ஆகும். ரஷ்யாவின் இந்த பின்வாங்கல் போரின் மிகப்பெரிய பின்னடைவுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இருந்து சுமார் 5,000 இராணுவ வன்பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் பிற சொத்துக்கள் அடங்களாக, 30,000 ரஷ்ய துருப்புக்கள் வெளியேறியதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த வெற்றியை, வெள்ளை மாளிகை அசாதாரண வெற்றி என்று பாராட்டியது. அதே நேரத்தில் உக்ரைனிய ஜனாதிபதி ஸெலென்ஸ்கி இதை வரலாற்று நாள் என்று அழைத்தார்.
இதுகுறித்து கம்போடியாவில் ஒரு உச்சிமாநாட்டின் போது பேசிய உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா, ‘உக்ரைனில் போர் தொடர்கிறது. இந்தப் போர் விரைவில் முடிவடைய வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மற்றவர்களை விட நாங்கள் நிச்சயமாக அதை விரும்புகிறோம்.’ என்று கூறினார்.
டினிப்ரோ ஆற்றின் மேற்குக் கரை வரை துருப்புக்கள் முன்னோக்கித் தள்ளப்பட்டதாக உக்ரைன் தரப்பில் இருந்து வெள்ளிக்கிழமை மாலைப் புதுப்பிப்பு தெரிவிக்கிறது.