தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை நீடிக்குமாறு உலகத் தலைவர்களிடம் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேசிய தீவு பாலியில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சிமாநாட்டில் கூடியிருந்த உலகத் தலைவர்களிடம் காணொளிவழியாக பேசிய போதே அவர் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
ரஷ்யாவின் அழிவுகரமான போர் நிறுத்தப்பட வேண்டிய நேரம் இதுவென்று தான் நம்புவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
அணுசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், பகைமையை முடிவுக்குக் கொண்டுவருதல், மேலும் ஆக்கிரமிப்பை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்களை அவர் கோடிட்டுக் காட்டினார். ரஷ்யாவைத் தவிர்த்து அவர் பலமுறை தலைவர்களை ‘ஜி-19’ என்று அழைத்தார்.
அவரது கோரிக்கைகளில் முக்கியமானது, கருங்கடல் தானிய ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒரு நீடிப்பு ஆகும், இது ஐக்கிய நாடுகள் சபைக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது.
ரஷ்ய போர்க்கப்பல்களால் உக்ரைனிய துறைமுகங்களில் தடுக்கப்பட்ட உணவு ஏற்றுமதிகள் வெளியே அனுப்பப்படுவதை இது உறுதி செய்கின்றது.
இந்த ஒப்பந்தம் தொடங்கியதில் இருந்து, 10 மில்லியன் டன் தானியங்கள் மற்றும் பிற உணவுகள் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டு, உலகளாவிய உணவு நெருக்கடியைத் தடுக்க உதவுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஆனால் ஒப்பந்தம் நவம்பர் 19ஆம் திகதி காலாவதியாகிறது. உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜி-20 அமர்வில் செவ்வாயன்று பேசிய ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, ‘போர் எப்போது முடிவடைந்தாலும் பரவாயில்லை’ என்று ஒப்பந்தம் காலவரையின்றி நீட்டிக்கப்பட வேண்டும் என கூறினார்.
‘உணவு உரிமை என்பது உலகில் உள்ள ஒவ்வொரு நபரின் அடிப்படை உரிமையாகும்,’ என்று அவர் கூறினார், இந்த ஒப்பந்தத்தை மைக்கோலைவ் பிராந்தியத்தில் உள்ள மற்ற துறைமுகங்களுக்கும் விரிவுபடுத்த முன்மொழிந்தார்.
ஜி 20 உறுப்பினரான ரஷ்யா சார்பாக இம்முறை ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ பங்கேற்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.