ரஷ்யாவின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களால் 10 மில்லியன் உக்ரைனியர்கள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளுமன் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தனது இரவு உரையில் கூறினார்.
உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்பு, 6 கப்பல் ஏவுகணைகள் மற்றும் ஐந்து ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) தெற்கு நகரமான சபோரிஸியாவிற்கு அருகிலுள்ள வில்னியன்ஸ்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏவுகணை தாக்கியதில் 7 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிழக்கில் ஒரு எரிவாயு உற்பத்தி ஆலை மற்றும் டினிப்ரோவில் ஒரு ஏவுகணை தொழிற்சாலை ஆகியவை சமீபத்திய இலக்குகளில் அடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கியமாக தலைநகர் கீவ், மேற்கு நகரமான வின்னிட்சியா, தென்மேற்கில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா மற்றும் வடகிழக்கில் சுமி ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.