கிளிநொச்சி இரணைமடுகுளத்தின் கீழான ஒதுக்கீடு பிரதேசங்களில், சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டினால், அங்கு அமைதியின்மை நிலவியது.
நேற்று (வியாழக்கிழமை) சட்டவிரோதமாக காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதனை, அழிப்பதற்காக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் சென்ற வேளை, அவர்களுக்கும் சட்டவிரோதச் செய்கையாளர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.
ஆரம்பத்தில் பயிர்செய்கை நடவடிக்கை மேற்கொள்ளும்போது குறித்த அதிகாரிகளால் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பயிர் செய்கையாளர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, குறித்த பிரதேசத்தில் பயிர்ச் செய்கை மேற்கொள்வதால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் எதுவும் மாவட்ட உயர்நிலை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.
இது ஒருபுறமிருக்க கிளிநொச்சி கிழக்கு நீர்பாசன பொறியிலாளர் பிரிவின் கீழுள்ள கல்மடுக்குளத்தின் கீழ் அரச அதிகாரிகள் உள்ளடங்கிய சிலர், சட்ட விரோதமாக மேற்கொண்ட பயிர் செய்கைகளுக்கு குளத்து நீர் திறந்து வழங்கியது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பிலும் அதிகாரிகள் மௌனம் காத்து வருவதாக கூறப்படுகின்றது.