இந்தியக் கடற்றொழிலாளர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை, இலங்கை கடற்படை தொடர்ந்தும் மீறுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது, இந்திய தேசத்திற்கு சவாலாகத் தோன்றுகிறது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2022 நவம்பர் 16ஆம் திகதி 14 தமிழக கடற்றொழிலாளர்களை கைது செய்து, அவர்களின் இயந்திர படகை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தமை தொடர்பிலேயே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்கள், அடிக்கடி சிறைபிடிக்கப்படுவதும் அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும் படகுகளை இலங்கை கடற்படை சேதப்படுத்துவதும் மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டதாக தமிழக முதல்வர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது தமிழகத்தின் 100 படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.