தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை கையளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகாலமாக மக்களுக்கு பொய்களை சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்கள் விரும்பியதைச் சாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள் சட்டத்தைக் கையாண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.