மங்களூரில் முச்சக்கரவண்டியில் நிகழ்த்தப்பட்டது குண்டுவெடிப்பு என்றும் இது தன்னிச்சையானது அல்ல மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என்று கர்நாடக பொலிஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மங்களூரில் முச்சக்கரவண்டியில் குண்டு வெடித்து சிதறிய இடத்தை கர்நாடக பொலிஸ் உயர் அதிகாரி அலோக் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தாக்குதலின் நோக்கம் என்றும் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கோவை உக்கடத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, செய்தியாளர்களிடம் உரையாற்றிய கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முச்சக்கரவண்டியில் பயணித்த நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்றும் எனினும் விசாரணை முடிந்த பின்னரே அனைத்தையும் அதிகாரபூர்வமாக தெரிவிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
காயமடைந்த நபர், கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாகுரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை, வீதியில் சென்றுக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியில் மர்ம பொருள் திடீரென வெடித்ததில், ஓட்டுநரும் பயணியும் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, கடந்த 16ஆம் திகதி தமிழகத்தின் கோவையில் உள்ள மத வழிபாட்டுத் தலத்திற்கு அருகே காரில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.