முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்மன்பிலவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கம்மன்பில சார்பில் ஆஜரான சட்டத்தரணி இனோகா பெரேரா, உதய கம்மன்பில புனித யாத்திரைக்காக இந்தியா செல்ல விரும்புவதாகவும், தற்போதைய பயணத்தடையை இம்மாதம் 23ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை உரிய காலத்திற்கு நீக்குமாறு உத்தரவிட்டது.
அவுஸ்ரேலிய வர்த்தகர் பிரையன் ஷடிக்கிற்குச் சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை 21 மில்லியன் ரூபாய்க்கு விற்றதாகவும், போலியான சட்டமூலத்தை உருவாக்கி நம்பிக்கையை மீறியதாகவும் உதய கம்மன்பிலவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.