மாலபே நெவில் பெர்னாண்டோ தனியார் வைத்தியசாலையின் செலவுகளை ஈடுசெய்ய சுகாதார அமைச்சு பணம் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கணக்காய்வு அறிக்கை தொடர்பில் அந்த அமைச்சு விளக்கம் அளித்துள்ளது
சைட்டம் நிறுவனம் அல்லது நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையுடன் எவ்வித உடன்படிக்கையிலும் ஈடுபடாமல் சுகாதார அமைச்சு 2017ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் வரை 218 கோடி ரூபாயை செலவிட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையொன்று அண்மையில் வெளிப்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, அமைச்சரவையின் அனுமதியின் பிரகாரம் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானம் அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால், நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மருந்துகளுக்கான பணத்தை சுகாதார அமைச்சு வழங்கியதாக செயலாளர் தெரிவித்தார்.
அமைச்சரவையின் அங்கீகாரம் காரணமாக உரிய பணத்தை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி கணக்காய்வு அறிக்கை தொடர்பான விடயங்களின் தெளிவுபடுத்தல் கணக்காய்வாளர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மேலும் தெரிவித்தார்.