பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கல்வெவ சிறிதம்ம தேரர், இன்று(23) அதிகாலை முகம் மறைக்கப்பட்ட நிலையில், கொழும்பு மேலதிக நீதவானின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்திற்கு, சிறைச்சாலை அதிகாரிகளினால் அழைத்து செல்லப்பட்டிருந்தார்.
தலா ஐந்து லட்சம் ரூபாய் வீதமான இரண்டு சரீர பிணைகளில் கீழ் விடுவிக்க நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபருக்கு பிணை வழங்க சட்ட மாஅதிபர் தீர்மானித்துள்ளதாக, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் நீதவானுக்கு அறிவித்திருந்தார்.
இதையடுத்தே கல்வெவ சிறிதம்ம தேரருக்கு பிணை வழங்க நீதவான் தீர்மானித்துள்ளார்.
கல்வெவ சிறிதம்ம தேரருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மாதமொரு முறை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர், பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயும் 89 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.