முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நானா பதவி விலகக் கூறினேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “போராட்டத்தின் விளைவினால் ஜனாதிபதியாகிய நான், போராட்டக்காரர்களை வழிபட வேண்டும் என்று நேற்று விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
இந்நாட்டின் அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதி பதவி விலகினால், அந்தப் பதவியை பிரதமர்தான் பொறுப்பேற்க வேண்டும்.
நான் ஜனாதிபதியானபோது, அப்பதவிலியிருந்து விலகுமாறு எனது வீட்டை தீக்கிரையாக்கினார்கள்.
ஆனால், நான் விலகவில்லை. நான் ஜனாதிபதி பதவியை எனக்குத் தருமாறு கேட்கவும் இல்லை. கடிதங்களை எழுதவும் இல்லை.
இந்த நாட்டின் நிலைமை மோசமாக இருந்த காரணத்தினால், மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்டவர்கள் ஜனாதிபதி பதவியை பொறுப்பேற்குமாறு என்னிடம் வலியுறுத்தினார்கள்.
மாறாக எதிர்க்கட்சித் தலைவர்தான், மே 12 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியதை மறந்துவிட்டார்.
அந்தக் கடிதத்தில், ஏனயை கட்சிகளுடன் இணைந்து இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க பிரதமர் பதவியை பொறுப்பேற்கத் தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்படி எழுதிவிட்டு, ஏன் என்னை இவர்கள் குறைக்கூற வேண்டும். இந்தக் கடிதம் கிடைக்கும் முன்பே நான் பிரதமராக பதவியேற்றுவிட்டேன்.
அத்தோடு, அந்தக் கடிதத்தில் புதிய பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனால்தான் நான் பிரதமராகி இரண்டு மாதங்களின் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்தார். நானா அவரை விலகச் சொன்னேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.