இராணுவத்தினர் அரசியல்வாதிகளின் கைப்பாவையாக செயற்படாது, நாடு மற்றும் அரசமைப்பின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்நாட்டில் இப்போது யுத்தம் இல்லை என்பதால், தேசிய பாதுகாப்பு தொடர்பாக பெரிதாக சிந்திக்கத் தேவையில்லை என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
தேசியப் பாதுகாப்புக்கு சவால் என்பது திடீரென ஏற்படும் விடயமாகும். இராணுவத்தினர் என்ற வகையில், அவர்கள் எப்போதும் தயார் நிலையிலேயே இருக்க வேண்டும்.
எனவே, பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக எவரும் குழப்பமடையத் தேவையில்லை. எந்தவொரு நாட்டிலும் தேசியப் பாதுகாப்பு ஸ்திரமாக உள்ளதாக உறுதியாகக்கூற முடியாது.
கொழும்பு மாவட்டத்தைவிட சிங்கப்பூர் சிறிய நாடாகும். ஆனால், அந்நாட்டில் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியானது, ஆசியாவிலேயே அதிகமான தொகையாகும்.
வியட்நாம், அவுஸ்ரேலியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளைவிட அதிக தொகைதான் அங்கு பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த வருடத்தைவிட தற்போது 35 பில்லியன் ரூபாய் அதிகமாக பாதுகாப்பு அமைச்சுக்காக ஒருக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தார்கள்.
சீனிக்கான விலை மனுக்கோரலில், 45 பில்லியன் ரூபாய் அதிகரித்தபோது அவர்கள் இதனை எதிர்க்கவில்லை.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனமானது, வருடாந்தம் 55 முதல் 65 பில்லியன் ரூபாய் நஷ்டமடைந்துக் கொண்டிருந்தபோதும் இவர்கள் கவலையடையவில்லை.
பாதுகாப்பின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளாத தரப்பினரால் நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்க முடியாது. அதேபோன்று, பாதுகாப்பு பலவீனமான ஒரு நாட்டில் பொருளாதாரமும் முன்னேறாது.
இராணுவத்திற்காக நாம் கதைக்கும் அதேநேரம், இராணுவமும் அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக செயற்படாது, நாட்டையும் அரசமைப்பையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ரத்துபஸ்வௌ போன்ற சம்பவங்களை எடுத்துக் கொண்டால், சில இராணுவத்தினர் அரசியல்வாதிகளை திருப்திப்படுத்த முயன்று, ஒட்டுமொத்த இராணுவமே எவ்வளவு அவப்பெயரை சம்பாதித்தது என்பதை மறந்துவிடக்கூடாது” என அவர் மேலும் தெரிவித்தார்.