வடக்கு மற்றும் கிழக்கில் கடலை அண்மித்த 36 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நில பரப்பில் பெரும் கடலட்டை பண்ணைகளை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழலில் இயற்கையின் கொடையாகவுள்ள கடலைப் பயன்படுத்தி இவ்வாறான பண்ணைகளை அமைப்பதன் மூலம் சர்வதேச வர்த்தகச் செயற்பாடு வினைத்திறன் பெறும் என்பதோடு இதன் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்டமுடியும் என்பதும் அதிகாரிகளின் வாதமாகவுள்ளது.
ஆனால், பண்ணைகள் அமைக்கப்படுகின்றபோது, அந்தந்த பிரதேசத்துக்குரிய கடற்றொழிலாளர்களிடத்தில் தெரியப்படுத்தாது, அவர்களின் வாழ்வாதத்தினை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமையே பிரச்சினையாக உள்ளது.
குறிப்பாக, வடக்கின் நான்கு மாவட்டங்களில் முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய 3 மாவட்டங்களும் கடல் அட்டை வளர்ப்பிற்கு உகந்த மாவட்டங்கள் என கண்டுகொள்ளப்பட்டதனால் தாராளமாக பண்ணைகள் வழங்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தில் இதுவரையில் 355 பண்ணைகள் தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு 265 கடல் அட்டைப் பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இவற்றினைவிட மேலும் 209 பண்ணைகளிற்கு கோரிக்கைகள் உண்டு.
தற்போது குடாநாட்டில் உள்ள 265 பண்ணைகளில் மிக அதிகமாக வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 118 பண்ணைகள் உள்ளன. இந்த 118 பண்ணைகளும் 250 ஏக்கர் பரப்பளவுகளில் உள்ளன.
இதேநேரம் இரண்டாவதாக கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 273 கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளதோடு 200 பண்ணைகள் கோரப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் தற்போது 79 கடல் அட்டைப் பண்ணைகள் உள்ளன.
அதேநேரம், அந்தோணியார்புரம் பகுதிதியல் 80 பண்ணைக்கான கோரிக்கையும் இலுப்பைக்கடவையில் 80 பண்ணைகளும் விடத்தல்தீவில் 150 பண்ணைகளும் கோரப்படுகின்ற அதே சமயம் தேவன்பிட்டியிலும் 54 பண்ணைகள் கோரப்படுகின்றன.
இவ்வாறு வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் வியாபிக்கும் செயற்பாடுகள் தொடர்வதால், சீனா அத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் திட்டத்தில் இறங்கியுள்ளது.
யாழ்ப்பாணத்தில், அரியாலை மற்றும் மன்னார் ஆகிய இரு இடங்களில் மட்டுமே தற்போது கடலட்டைகளை இனப்பெருக்கம் செய்யும் வசதிகள் உள்ளன.
இதில் மன்னார் பண்ணை அரச பண்ணையாகவும் அரியாலை பண்ணை குயி-லான் என்னும் சீனாவுக்குச் சொந்தமான பண்ணையாகவும் உள்ளது.
குயி-லான் பண்ணை 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2022 மார்ச் மாதம் வரையான 5 மாத காலத்திற்குள் மட்டும் 4இலட்சம் குஞ்சு உற்பத்தி செய்துள்ளமையானது, அப்பண்யை எவ்வாறு ஏனைய கடலட்டைப் பண்ணைகளில் ஆதிக்கத்தினைக் கொண்டிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
அதேநேரம், கடலட்டை பண்ணைகள் பீஜிங் கவனிக்கும் ஒரு முக்கிய பகுதியாகும்.
சில ஊடக செய்திகளின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்காங் ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுமார் 336 தொன் கடலட்டைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
எனவே, இவ்வகையான கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது இலாபகரமானது என்பதால் இத்துறையில் சீன வணிக நிறுவனங்களே செல்வாக்குச் செலுத்துகின்றன. அதேநிலைமை தான் வடக்கிலும் நீடிக்கின்றது.
இவ்வாறிருக்கையில், தற்போது, தென் சீனாவின் மக்காவ்வை தளமாகக் கொண்ட சுன்மான் கலாசார வணிகம் குழு என்ற நிறுவனம் புத்தளம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பாரிய அளவிலான கடலட்டை பண்ணை திட்டத்தை அமைக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
450 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள 8.6மில்லியன் கிலோ கடலட்டைகளை உற்பத்தி செய்யவதற்கு முன்மொழியப்பட்ட திட்டம் 36 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான கடற்பரப்பை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
அத்துடன் இந்தத் திட்டமானது அடுத்துவரும் பத்து ஆண்டுகளுக்கு 5000 ஏக்கர் வரையிலான மீன்வளர்ப்பு நீரைப் பயன்படுத்த கூடும் என்பதால் இது கடல் வளத்தை கடுமையாக பாதிக்குமென ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அரியாலை, அல்லைப்பிட்டி, புங்குடுதீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி, இரணைதீவு, கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில், பள்ளிக்குடா, நாச்சிக்குடா போன்ற மீனவ கிராமங்களில் வாழும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் சிறுகடற்றொழிலாளர்கள், தமது வாழ்வாதாரத்தை இந்தக் கடலட்டைப் பண்ணைகள் ஆக்கிரமித்துள்ளன என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, கிராஞ்சி கிராமத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துத் தருமாறும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தும் வருகின்றார்கள்.
இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த உள்ளுர் மீனவர்கள், சீன வணிக மீன் வளர்ப்பு மீதான அரசாங்கத்தின் உந்துதலை தங்கள் வாழ்வாதாரத்திற்கும் நிலத்திற்கும் அச்சுறுத்தலான விடயமாகவே கருதுகின்றனர்.
முன்மொழியப்பட்ட கடலட்டை பண்ணைகள் நன்மையை விட தீமையையே ஏற்படுத்தும் என யாழ். மீனவ சம்மேளனத்தின் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுர் மக்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி அரசாங்கம் திட்டங்களை ஊக்குவிக்க முயற்சிக்கும் அதே வேளையில், இந்த பண்ணைகள் தங்கள் வாழ்வாதாரத்தை நம்பியிருக்கும் உள்ளுர் கடல் சூழலுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும் என்று மீனவர்கள் நம்புகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சீனா தன்னுடைய மக்களுக்கு உணவை பெற்றுக் கொடுப்பதற்காக எமது கடல் வளத்தை அழிக்கின்றது. இதற்கே வட மாகாண கடற்றொழில் அதிகாரிகள் துணை போகின்றனர்.
இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் மக்கள் கடலட்டையை உண்ணுவதில்லை. சீனாவிற்கே அவை செல்கின்றன என்றும் அவர் கூறினார்.
அவ்வாறான நிலையில், எமக்கிருக்கும் மிகப்பெரிய கவலை யாதெனில் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு தமிழ் அரசியல் தலைமைத்துவமும் இந்த கடலட்டை பண்ணைகள் குறித்து பேசுவதில்லை.
இலங்கையின் மீன் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை வடக்கு மீனவர்களே வழங்கினர்.
அந்த மீனவ சமூகத்தின் இன்றைய நிலை பேரவலமாகவே உள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னராசா மேலும் கோடிட்டுக் காண்பித்துள்ளார்.