சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மிக அபூர்வமான முறையில் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை மேற்கு சீனாவின் உரும்கியில் உள்ள உயரமான கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்ததையடுத்து நாடு தழுவிய போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், நேற்றும் பொதுமக்கள் வித்தியாசமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
வித்தியாசமான முறையில் எழுத்துகள், படங்கள் இல்லாத வெள்ளை பதாகைகளை ஏந்தி பலர் போராட்டம் நடத்தினர். இந்த முறை, தற்போதைய போராட்டத்தின் அடையாளமாக மாறி வருவதாகக் கூறப்படுகிறது.
முக்கிய நகரங்களின் வீதிகளிலும், பல்கலைக்கழக வளாகங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டங்களின் போது, பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், மக்கள் போராட்டங்களின் புகைப்படங்களை எடுப்பதையும், அவர்களின் சாதனங்களில் படங்களை நீக்குவதையும் பொலிஸார் தடுத்து வருகின்றனர்.
ஆனால், முடக்கநிலை எதிர்ப்பு போராட்டங்களின் பல படங்கள் ஷாங்காய் மற்றும் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்தும், செங்டு மற்றும் வுஹான் போன்ற பிற முக்கிய நகர்ப்புறங்களிலிருந்தும் வெளிவந்துள்ளன.