சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈவினை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு மோட்டார்கள் களவாடப்பட்டிருந்தன.
இச்சம்பவம் குறித்து பண்ணையின் உரிமையாளர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். குறித்த முறைப்பாடானது சுன்னாகம் பொலிஸாரினால் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்றையதினம் (திங்கட்கிழமை) 18, 21 மற்றும் 25 வயதுடைய, ஈவினை பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இதன்போது களவாடப்பட்ட மோட்டார்களும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட மோட்டார்களுடன் சந்தேகநபர்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் மோட்டார்களுடன் கைது செய்யப்பட்ட குறித்த மூவரையும், மீட்கப்பட்ட மோட்டார்களையும் பாரம் எடுத்தனர்.
அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். மீட்கப்பட்ட மோட்டார்கள் சுமார் 4 இலட்சம் பெறுமதி உடையவை என தெரிவிக்கப்படுகிறது.