சம-பாலின திருமணங்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிப்பதற்கான சட்டமூலத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் சபை நிறைவேற்றியுள்ளது.
அந்த நாட்டில் சம-பாலினத்தவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு சட்ட அங்கீகாரம் அளித்தது. அதனைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான சம-பாலி திருமணங்கள் அங்கு நடந்துள்ளன.
இந்த நிலையில், தற்போது பழமைவாத நீதிபதிகள் ஆதிக்கம் நிறைந்ததாக கருதப்படும் உச்ச நீதிமன்றத்தில், கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டிருந்த சட்ட அங்கீகாரம் அண்மையில் தீர்ப்பு இரத்து செய்யப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சம-பாலினத்தவர் திருமணங்களுக்கான அங்கீகாரமும் ரத்து செய்யப்படும் என்று அஞ்சப்பட்டு வந்த நிலையில், செனட் சபை இந்த சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது.
செனட்சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் உள்பட 61 பேர் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 36 பேர் எதிராக வாக்களித்தனர்.
இதன் மூலம் செனட் சபையில் அந்த சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேறியது. இதையடுத்து அந்த சட்டமூலம் தற்போது பிரதிநிதிகள் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அங்கும் சட்டமூலம் நிறைவேறும் பட்சத்தில் அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி ஜோ பைடன் அதில் கையெழுத்திட்டதும் அது சட்டமாகும்.