ரணில் விக்கிரமசிங்க விசுவாசமாக ஒரு பேச்சுவார்த்தைக்குத் தயாரா இல்லையா என்ற சந்தேகம் தமிழ்த் தரப்பிடம் கடைசிவரை இருக்க வேண்டும். அவர் அவ்வாறு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய தேவை அவருக்கு உண்டு. மேற்கு நாடுகள் பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசாங்கத்தை பிணை எடுப்பதென்றால் இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக தெரிகிறது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான உதவிகளும், இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நகர்வுகளும் ஒரே பொதிக்குள் வைக்கப்பட வேண்டும் என்று மேற்கு நாடுகள் வற்புறுத்துவதாக தெரிகிறது. இந்த ஆண்டு ஜெனிவாவில் இந்தியப் பிரதிநிதியின் உரையிலும் அது கூறப்பட்டது. அதனால் அரசாங்கம் குறைந்தபட்சம் ஒரு தோற்ற மாயையாகவாவது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
ஆனால் ஒரு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டிய தேவை ரணிலுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். அதுபோலவே இந்திய உளவுப் பிரிவின் தலைவர் அண்மையில் இலங்கைக்கு வந்ததாகவும்,இந்தியா சமஸ்ரித் தீர்வுக்கு ஆதரவாக இருப்பதாக அவர் அரசாங்கத்திடம் தெரிவித்ததாகவும் கிடைக்கும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதுவும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். ஆனால் இந்திய உளவுப் பிரிவின் தலைவர் இலங்கை வந்த செய்தி உண்மையல்ல என்றும்,ஒரு ஆங்கில ஊடகம் முதலில் அதைப் பிரசுரித்தது என்றும், அச்செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கொழும்பு ஊடக வடடாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், ரணில் விக்கிரமசிங்கவை இந்தியா கிட்ட எடுக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தியாவை நெருங்கிச் செல்ல அவர் எடுத்த முயற்சிகள் பெரியளவிற்கு பலன் அளிக்கவில்லை என்பதும் தெரிகிறது. இந்தியாவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் உள்ள இடைவெளியும் தமிழ்த் தரப்பின் பேரத்தை அதிகப்படுத்தும். எனவே இப்போதிருக்கும் சூழலை வெற்றிகரமாக கையாள வேண்டிய பொறுப்பு தமிழ்க் கட்சிகளுக்கு உண்டு. தமிழ் கட்சிகள் அதை எப்படிக் கையாளலாம்?
கடந்த வார கட்டுரையில் கூறப்பட்டது போல தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தங்களுக்கு இடையே ஓர் உடன்படிக்கைக்கு வந்து ஒப்பீட்டளவில் பொதுவான ஒரு கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
இரண்டாவதாக, பேச்சுவார்த்தைகளில் கட்சிகளை வழிநடத்தவும் ஆலோசனை கூறவும் ஒரு நிபுணர் குழுவை உருவாக்க வேண்டும். அதில் சிவில் சமூகங்களையும் உள்ளடக்க வேண்டும்.அந்நிபுணர் குழு பேச்சுவார்த்தைக்கான ஒரு நிகழ்ச்சி நிரலை கட்சிகளோடு இணைந்து உருவாக்கலாம். முடியுமானால் பேச்சுவார்த்தை மேசையில் கட்சிசாரா நிபுணர்களுக்கும் இடம் கொடுக்கலாம்.
இப்போதுள்ள நிலைமைகளின்படி தமிழ்க் கட்சிகள் பெருமளவுக்கு சமஷ்ரித் தீர்வை அல்லது சமஷ்ரிப் பண்புடைய ஒரு தீர்வை வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்களக் கட்சிகள் அதற்குத் தயார் இல்லை.
ரணில் விக்ரமசிங்க தன்னிடம் என்ன தீர்வு உள்ளது என்பதனை வெளிப்படையாக இதுவரை கூறியிருக்கவில்லை. அவர் கூறவும் மாட்டார். ஆனால் நிச்சயமாக சமஷ்டிதான் தீர்வு என்று வெளிப்படையாகச் சொல்ல அவர் தயார் இல்லை என்று தெரிகிறது.
சஜித் பிரேமதாச, பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். இந்த விடயத்தில் அவர் மாறாத நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கட்சிக்குத் தலைமை தாங்கத் தொடங்கியதில் இருந்து இன்றுவரை அவர் அதைத்தான் கூறி வருகிறார். யாழ்ப்பாணத்தில் நடந்த சந்திப்புகளின் போதும் அவர் அதைத்தான் வலியுறுத்தினார்.
மஹிந்த ராஜபக்ச பதிமூன்று பிளஸ் என்று கூறுகிறார். அவரும் பல ஆண்டுகளாக அதைத்தான் கூறி வருகிறார்.
எனவே தொகுத்துப் பார்த்தால், சிங்களத் தரப்பில் 13 ஐத் தாண்டி வரத் தேவையான அரசியல் திடசித்தம் கிடையாது. ஆனால் தமிழ்த் தரப்போ கூட்டாட்சியை கேட்கின்றது. அதாவது தமிழ் தரப்பின் கோரிக்கைகளுக்கும் சிங்களத் தரப்பு தரக்கூடியவற்றிற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. அதை கோட்பாட்டு அடிப்படையில் சொன்னால் நாட்டின் ஒற்றை ஆட்சிக் கட்டமைப்பை மாற்ற சிங்களக் கட்சிகள் தயாரில்லை என்பதுதான்.
அவர்கள் 13ஐப் பற்றிப் பிடிப்பதற்கு காரணம் அதுதான். அதைவிட மேலதிகமாக ஒரு காரணம் உண்டு. ,இந்தியாவையும் இதில் சிங்களத் தரப்பின் பங்காளியாக்குவது. கடந்த பல தசாப்தங்களாக இந்தியா 13-வது திருத்தத்தைத் தான் வலியுறுத்தி வருகிறது. இந்தியா ஏன் 13வது திருத்தத்தை தொடர்ச்சியாக வலியுறுத்துகிறது? அது தமிழ் மக்களுக்கு தீர்வு என்பதாலா? இல்லை. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மிஞ்சியிருக்கும் ஒரே உறுப்பு அதுதான். இந்திய-இலங்கை உடன்படிக்கையின்படி இனப்பிரச்சினையில் இந்தியா தலையிடுவதற்குரிய வாசல் அதுதான். அதாவது இந்தியா இலங்கை இனப்பிரச்சினையில் தனது பிராந்திய நலன்களின் அடிப்படையில் தலையிடுவதற்கான ஒரு துருப்புச் சீட்டாக அதைப் பார்க்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் தரப்பு என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு தமிழ்த் தரப்பு எதிராக இல்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக முன்வைக்க வேண்டும். அதை ஏற்கனவே கஜேந்திரகுமார் செய்துவிட்டார். அடுத்த கட்டமாக இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்காக தமிழ் மக்களின் கோரிக்கைகளை 13க்குள் முடக்க கூடாது என்பதையும் தமிழ்த் தரப்பு வலியுறுத்த வேண்டும்.
ரணிலுக்கும் புதுடில்லிக்கும் இடையில் இடைவெளி இருப்பதாக தெரிகிறது. ரணில் இந்தியாவுக்கு செல்ல முயற்சித்த பொழுதும் இந்தியா அவரை இன்றுவரை உத்தியோகபூர்வமாக அழைக்கவில்லை என்றும் தெரிகிறது. வரும் ஆண்டில் சுதந்திர தினத்தில் பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக அழைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு தகவல் உண்டு. அதற்கு முன் இந்தியாவை திருப்திப்படுத்தும் நகர்வுகளை இலங்கை முன்னெடுக்க வேண்டியிருக்கும். பலாலி விமான நிலையத்தை மீளத் திறப்பது, கலாச்சார மண்டபத்தைத் திறப்பது, காங்கேசன் துறைக்கும் காரைக்காலுக்கும் இடையே படகுப்பாதையைத் திறப்பது, சீனாவின் கடலட்டைப் பண்ணைகளைக் கட்டுப்படுத்துவது…. போன்ற பல விடயங்களிலும் இந்தியாவை திருப்திப்படுத்த வேண்டியிருக்கும்.
சிங்கள மக்கள் ஓர் அரசுடைய தரப்பு. இந்தியாவுக்கு எதிராகவோ அல்லது வேறு எந்த நாட்டுக்கும் எதிராகவோ சிங்கள ஆட்சியாளர்கள் முதலில் வீரம் காட்டுவார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவுகளின் மூலம் வெளிநாடுகளோடு தங்களை சுதாகரித்துக் கொள்வார்கள். இந்திய-இலங்கை உடன்படிக்கையில் ஜெயவர்த்தனா அதைத்தான் செய்தார்.இந்தியப் படைகளை வெளியேற்றும் விடயத்தில் பிரேமதாசவும் அதைத்தான் செய்தார். ஆட்சி மாற்றத்தின் போது 2015ல் மஹிந்த அதைத்தான் செய்தார். கோட்டாபய ஆட்சிக்கு வந்ததும் அதைத்தான் செய்தார்.எனவே அரசுடைய தரப்பாகிய சிங்கள மக்கள் வெளி அரசுகளோடு சுதாகரித்துப் போகும் ஒரு ராஜதந்திர பாரம்பரியத்தை கொண்டிருக்கிறார்கள். அரசுகளுக்கு வெட்கமில்லை. மானம் இல்லை. ரோஷம் இல்லை. எனவே ரணில் விக்கிரமசிங்க இந்தியாவை சுதாகரித்துக் கொள்ளமாட்டார் என்று கருதத் தேவையில்லை. பலாலி விமான நிலையம் அடுத்த வாரம் திறக்கப்படுமாக இருந்தால் அவர் இந்தியாவைச் சமாளிக்க முற்படுகிறார் என்று பொருள். இதுபோலவே யாழ்.கலாச்சார நிலையத்தை திறப்பதற்குரிய பேச்சு வார்த்தைகளை இந்த வாரம் அரசாங்கம் தொடங்கியிருக்கிறது.
ஆனால் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவில் ஏற்படக்கூடிய பகைநிலைதான் தமிழ் மக்கள் பெறக்கூடிய தீர்வின் பருமனைத் தீர்மானிக்கிறது. எனவே இது விடயத்தில் தமிழ் மக்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. பேச்சு வார்த்தைகளில் இந்தியாவை ஒரு மத்தியஸ்த்தர் ஆக தமிழ்த் தரப்பு அழைக்க வேண்டும். மேற்கு நாடுகளோடு இணைந்த ஒரு இணைத் தலைமைக்குள் இந்தியாவுக்கு முதன்மை வழங்க வேண்டும். தமிழ் மக்களாகக் கேட்டு இந்தியா மத்தியஸ்தம் வகிக்குமாக இருந்தால் அது தமிழ் மக்களின் பேரத்தை அதிகப்படுத்தும்.
ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்த்தம் இன்றி இலங்கைத்தீவில் இரண்டு இனங்களும் உடன்பாட்டுக்கு வர முடியாது என்பது கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு. இலங்கைத் தீவில் ஒப்பீட்டளவில் அதிக காலம் நீடித்த இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய இலங்கை- உடன்படிக்கை முதலாவது.இதில் இந்தியப்படையின் பிரசன்னம் இருந்தது.இரண்டாவது, ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை. இதில், ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரசன்னம் இருந்தது. மூன்றாவது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். அதில் ஐநா ஒரு மூன்றாவது தரப்பாக இல்லை என்றாலும் ஐநாவின் கண்காணிப்பு அங்கே இருந்தது. அது ஒரு பலமான மத்தியஸ்தம் இல்லை என்பதனால் மூன்று ஆண்டுகளில் அதை மைத்திரி தோற்கடித்தார். இந்த மூன்று உடன்படிக்கைகளின் ஊடாகவும் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், ஒரு மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல், மத்தியஸ்தம் இல்லாமல் இலங்கைத்தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒரு தீர்வை எட்ட முடியாது என்பதுதான். எனவே தமிழ்த் தரப்பு ஒரு மூன்றாவது தரப்பின் மத்தியஸ்தத்தைக் கேட்க வேண்டும். அது பேச்சுவார்த்தைக்கான ஒரு நிபந்தனை என்று ரணில் கூறக்கூடும்.அது நிபந்தனை அல்ல.அதுதான் இலங்கை தீவின் யதார்த்தம்.