தற்போதைய சிரமங்களை சமாளிக்க இலங்கைக்கு உதவுவதில், சாதகமான பங்கை ஆற்றுவதற்கு தொடர்புடைய நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் தம்முடன் இணைந்து செயற்படுமென சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு தொடர்பான விரைவான முன்னேற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இந்த வாரம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகள் தொடர்பில் கருத்து கேட்டபோதே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் இவ்வாறு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற சர்வதேச பொருளாதார, நிதி நிறுவனங்களுடன் சீனா நீண்டகாலமாக நல்ல ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பாக இலங்கையின் சிரமங்கள் மற்றும் சவால்களுக்கு சீனா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் கூறினார்.
பிரச்சினையை சரியான முறையில் தீர்ப்பதற்கு இலங்கையுடன் வழிவகைகளை மேற்கொள்வதில் நிதி நிறுவனங்களை ஆதாரிப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய சிரமங்களை சமாளிப்பதற்கும், அதன் கடன் சுமையைக் குறைப்பதற்கும், நிலையான அபிவிருத்தியை அடைவதற்கும் ஆக்கபூர்வமான பங்களிப்பைத் சீனா தொடரும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.