திருகோணமலைக்கு வடகிழக்கே 320 கி.மீ தொலைவிலுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழமுக்கம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (புதன்கிழமை) மாலை சூறாவளியாக படிப்படியாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இந்த சூறாவளி நாளை தென்மேற்கு வங்கக்கடலில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெருங்க வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.