ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
வொஷிங்டனில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த, அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஈரானுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில், வான் பாதுகாப்பு அமைப்புகள், இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் உட்பட ஈரானுக்கு மேம்பட்ட இராணுவ உதவியை வழங்க ரஷ்யா முடிவெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க உளவுத்துறை தகவல்களின்படி ஈரானிய விமானிகளுக்கு சுகோய்-35 ரக போர் விமான பயிற்சியை ரஷ்யா அளித்து வருவதாகவும், அடுத்த வருடத்திற்குள் போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து ஈரான் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போர் விமானங்கள் அந்த பிராந்திய அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது ஈரானின் விமானப்படையை கணிசமாக பலப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.