அவுஸ்ரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பேஷ் ரி-20 லீக் தொடரில், சிட்னி தண்டர் அணி 15 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் அணியொன்று மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இதுவே ஆகும்.
சிட்னி மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற போட்டியில், சிட்னி தண்டர் அணியும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனைத்தொடர்ந்து 140 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய சிட்னி தண்டர் அணி, 5.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, அடிலெய்ட் ஸ்ட்ரைக்கஸ் அணியின் பந்துவீச்சில், 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹென்றி தோர்ன்டன் தெரிவுசெய்யப்பட்டார்.