பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இலங்கையில் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் “வேகமாக அதிகரிக்கும் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொண்டுவரும் இலங்கையில், நான்கு பேரில் ஒருவர் ஏற்கெனவே உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்
இதேவேளை 2021ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி கீழ்நோக்கிய போக்கில் உள்ளதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் விலங்குணவு கிடைக்காமலும் மீனவர்கள் எரிபொருளை பெற முடியாமலும் உள்ளனர்.
இதன் காரணமாக, உள்ளூர் சந்தைகளில் உணவு விநியோகம் சுருங்கி வருவதாகவும் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உதவிகள் 244,300 பேரை சென்றடைந்துள்ளது.
அதேவேளை 51 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்காக நேற்று (திங்கட்கிழமை) வரை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.