உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் வெகுவாக உச்சமடைந்திருக்கம் நிலையில் எதிர்வரும் 2023 ஆண்டுக்கான ஜி20 நாடுகளின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
இந்தோனேஷியாவின் பாலி தீவில் நடைபெற்ற 17ஆவது கூட்டத்தொடரின் நிறைவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோவினால் குறித்த தலைமைப்பதவி கையளிக்கப்பட்டுள்ளது.
சர்வதேசத்தில் வளர்ச்சியடைந்த முன்னணி 20 நாடுகளின் முக்கிய கூட்டணியாக இருப்பது ஜி20 கூட்டமைப்பாகும்.
இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.
ஜி20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் அதன் பங்காளி நாடுகளுக்கிடையில் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்த முறை இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பு செயல்பட உள்ளது.
இந்நிலையில் இந்தியா, தனது தலைமையின் கீழாக குறித்த கட்டமைப்பை அதியுச்ச வினைத்திறன் வெளிப்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் இடம்பெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக இந்தியா அம்மாநாட்டுக்கான தயார் படுத்தல்களில் களமிறங்கி விட்டது.
முன்னதாக, தனது மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து பிரதமர் மோடி சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் குறித்த மாநாட்டை நடத்துதல் மற்றும் அதற்கான மாநில அரசாங்கங்களின் ஒத்துழைப்புக்களை கோரியுள்ளதோடு, கூட்டுச் செயற்பாட்டை முன்னெடுப்பதற்கும் இணக்கத்தினை எட்டியுள்ளார்.
அதேநேரம், குறித்த ஜி20 மாநாட்டின் காலத்தினை அண்மித்து 200 மாநாடுகளை நடாத்துவதற்கு திட்டமிடலொன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனைவிடவும், ஜி20 இந்திய தலைமைத்துவத்திற்கான இலச்சினை கருப்பொருள் மற்றும் இணையத்தளம் ஆகியவை பிரதமர் நரேந்திர மோடியார் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் அடுத்த ஜி20 கூட்டத்தின் தலைமைத்துல நாடாக இந்தியாவின் கருப்பொருளான ‘வசுதைவ குடும்பகம்’ அல்லது ‘ஒரு பூமி ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்’ என்பது புராதன சமஸ்கிருத நூலான உபநிடதத்திலிருந்து பெறப்பட்டதாகும்.
இக்கருப்பொருளானது மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிர்கள் ஆகியவையும் அவற்றுடன் தொடர்புடைய ஏனைய உயிரினங்கள் உட்பட சகல உயிர்களினது பெறுமதியினையும் அவை பூமியிலும் பரந்த இப்பிரபஞ்சத்திலும் கொண்டிருக்கும் தொடர்பினையும் உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.
அத்துடன் வாழ்வியல் செயற்திட்டம் தொடர்பாகவும் அதனுடன் இணைந்திருக்கின்ற தனிப்பட்ட வாழ்க்கை முறை மற்றும் தேசிய அபிவிருத்தியில் தொடர்புடைய சூழலுக்கு இசைவான ஸ்திரமான மற்றும் பொறுப்புணர்வு மிக்க தெரிவுகள் மூலம் தூய்மையானதும் பசுமையானதும் செழுமைமிக்கதுமான எதிர்காலத்தைத்தரும் செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றது.
அதேநேரம், ஜி20 நாடுகளின் மாநாட்டு இலச்சினையானது இந்திய தேசியக்கொடியின் வர்ணங்களான காவி, வெள்ளை மற்றும் பச்சை, மற்றும் நீல நிறம் ஆகியவற்றின் மூலமான உத்வேகத்தை பிரதிபலிக்கின்றது. மேலும் இந்தியாவின் தேசிய மலரான தாமரை சவால்களுக்கு இடையேயான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது.
ஒட்டுமொத்தமாக, இயற்கையுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கான இந்தியாவின் புவி சார்ந்த அணுகுமுறையை பூமிச் சின்னம் பிரதிபலிக்கிறது. ஜி-20 இலச்சினைக்கு கீழே எழுதப்பட்டுள்ள ‘பாரத்’ என்ற வார்த்தை தேவநாகிரி முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சமாகும்.
அதுமட்டுமன்றி, ஜி20 இந்திய தலைமைத்துவத்தின் பிரதான இலக்கினை இத்தொனிப்பொருளும் இலச்சினையும் தெளிவாகவும் வலுவாகவும் பிரதிபலிக்கின்றன.
சவால்மிக்க இக்காலப்பகுதி ஊடாக பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் சூழலுடன் நல்லிணக்கமான வாழ்வின் அவசியத்தையும் ஸ்திரமான, முழுமையான, பொறுப்புணர்வுள்ள மற்றும் பரந்தளவிலான வளர்ச்சி உலகிலுள்ள அனைவருக்கும் சமமாகவும் நீதி நெறிமுறைகளுக்கு அமைவாகவும் கிடைப்பதற்கான முயற்சிகளையும் ஜி20க்கான தனித்துவம் வாய்ந்த இந்திய அணுகுமுறையானது சுட்டிக்காட்டுகின்றது.
அத்துடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களின் மீதான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலில் இந்தியா பங்களிப்பு வழங்குவதற்கான வாய்ப்பினை தருவதாக ஜி20 தலைமைத்துவம் அமைகின்றது.
மேலும் மனிதர்களை மையப்படுத்திய அணுகுமுறையால் உயர்வடைந்த செழிப்பான எதிர்காலம், செயற்திறன்மிக்கதும் வளர்ச்சியடைந்ததுமான சமூகம், மற்றும் செழுமை ஆகியவற்றை இலக்காகக் கொண்டு, இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம் இடம்பெற்ற 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆரம்பமான இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டான 2047ஐ நோக்கிய 25 ஆண்டுகளைக் குறிக்கும் ‘அம்ரித்காலின்’ ஆரம்பத்தையும் ஜி20க்கான இந்திய தலைமைத்துவம் சுட்டிக்காட்டுகிறது.
அத்துடன், இந்தியாவானது, பங்களாதேஷ், எகிப்து, மொரிசியஸ் நெதர்லாந்து, நைஜீரியா, ஓமான், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை இம்மாநாட்டிற்கு விருந்தினர் அந்தஸ்துடன் அழைக்கவுள்ளது.
இது, இந்தியாவுக்கும் குறித்த நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்கு மேலும் சந்தர்ப்பமாக அமையவுள்ளது.
அத்துடன், உலகளவில் மாறுபட்ட அரசியல் நிர்வாகங்களைக் கொண்ட பலதரப்பு அரசியல் கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளை வழிநடத்துவதற்கான வாய்ப்பை இந்த தலைமைப் பதவி இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறது.
சர்வதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவிகிதத்தையும், சர்வதேச வர்த்தகத்தில் 59 சதவீதம் முதல் 77 சதவீதம் விகிதத்தையும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும், உலக நிலப்பரப்பில் 60மூ விகிதத்தையும், தொழில்துறையில் வளர்ந்த, வளர்ந்துவரும் உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளை உள்ளடக்கியது தான் இந்த ஜி20 கூட்டமைப்பு. ஆகவே, இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஒத்துழைப்புக்கும் மற்றுமொரு திறவுகோலா இம்மாநாடு அமையவுள்ளது.