புதிய வகை உருமாறிய கொரோனா (பிஎப்.7) வைரஸ் தொற்று தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்று (சனிக்கிழமை) முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து துறைக்கு, சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். மரபணு பரிசோதனை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம்.
அந்த பயணிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும்’ என கூறினார்.
டெல்லியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தின் போதே சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது.