2023 ஆம் ஆண்டு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் வரலாற்றுத் தடம் பதிக்கும் ஆண்டாகும். இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தியை மையமாகக் கொண்டு பல வேலை திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடு அமைப்பு அமைச்சின் பிரஜா சக்தி பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் கர்பிணி தாய்மார்களுக்கான சுகாதாரப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்விலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் “தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக பெண்கள் தங்களது குடும்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தங்களது சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகளை பிள்ளைகளுடைய கல்வியை மேற்கொள்ளவும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்
எனவே 2023 ஆம் ஆண்டு தொழில் முனைவோருக்கான ஆண்டாக மாற்ற பல வேலை திட்டங்களை நான் முன்னெடுக்க உள்ளோம். அதே சந்தர்ப்பத்தில் மாணவர்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் போதைப் பொருளுக்கு எதிரான பல வேலை திட்டங்களையும் நாம் முன்னெடுத்துள்ளோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த நிகழ்வில் தெல்தோட்ட பிரதேச செயலாளர் திருமதி.ஆத்மா, பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள், பிரஜா சக்தி அதிகாரிகள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.