ரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆறு பேர் காயமடைந்தனர். ஒரே இரவில் ஏற்பட்ட தீயினால் இரண்டு மாடி மரக் கட்டடத்தின் மேல் தளம் முழுவதும் எரிந்து நாசமானது.
வெப்பமூட்டும் கொதிகலன் பழுதடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
டசன் கணக்கான தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர் மற்றும் சனிக்கிழமை அதிகாலை தீ அணைக்கப்பட்டது.
முதியோர்களுக்கான தனியார் இல்லம் சட்டவிரோதமாக இயங்கி வருவதாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோன்ற அனைத்து வசதிகளும் இப்போது ஆய்வு செய்யப்படும் என்று பிராந்தியத்தின் ஆளுநர் கூறினார். மேலும், குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
முதியோர்களுக்கான பதிவு செய்யப்படாத பல வீடுகள் ரஷ்யா முழுவதும் இயங்கி வருவதாக உள்ளூர் தீயணைப்பு சேவை அதிகாரிகள் டாஸிடம் தெரிவித்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டில், கெமரோவோவில் உள்ள ஓய்வு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 37 சிறுவர்கள் உட்பட 60 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.