ஸ்பெயினில் கிறிஸ்மஸ் ஈவ் அன்று (சனிக்கிழமை) பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள லெரெஸ் ஆற்றில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) ஒரு பெண்ணின் உடலை மீட்புக் குழுவினர் கண்டெடுத்தனர்.
லுகோவில் இருந்து வைகோ நோக்கி பயணித்த பேருந்து சுமார் 30 மீட்டர் (98 அடி) உயரத்தில் இருந்து வேகமாக ஓடும் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பேருந்து ஓட்டுநருக்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனை இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த நிலையில், மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கு பின்னர் ஆறு உடல்களைக் கண்டெடுத்த பின்னர், கலீசியாவின் பிராந்திய தலைநகரான சாண்டியாகோ டி காம்போஸ்டெலாவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத பெட்ரே கிராமத்திற்கு அருகே மீட்புக் குழுக்கள் தங்களது தேடுதல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், உயிர் பிழைத்த ஒரு பயணி, தான் பயணித்த நண்பர், பாதிக்கப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இல்லை என்று கூறியதை அடுத்து, மீட்புக்குழுவினர் மீண்டும் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்தனர். திங்கள்கிழமை காலை ஆற்றில் ஹெலிகொப்டர் மூலம் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.