வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வாரிசு தொடர்ந்து ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 24-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் ரசிகர்கள் கொண்டாட்டத்துடன் நடைபெற்றிருந்தது. இதில், சந்திரசேகர் மற்றும் ஷோபா கலந்து கொண்டனர்.
இந்நிலையில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் விஜய்யின் தாயார் ஷோபா சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, “எல்லாரும் நல்ல இருக்கணும்’னு வேண்டிக்கத்தான் இங்கு வந்தேன்.
விஜய் படம் நல்ல ஓடனும்னு எல்லாரும் வேண்டிக்கங்க” என்று கூறினார். ஷோபா சந்திரசேகர் மேலும் விஜய்யின் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “விஜய் எந்தப் படத்தில் எப்படி நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது. ‘வாரிசு’ படத்தில் அவர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றே எனக்கு தெரியாது.
இந்த படம் ஃபேமிலி சப்ஜெக்ட் என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். அவரின் அரசியல் வருகை பற்றி எனக்கோ என் கணவருக்கோ எதுவுமே தெரியாது” என்று கூறினார்.

















