“தேசியப் பட்டியல் ஆசனம்” என்ற தமக்கான அரசியல் உரிமையை வென்றெடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி அசமந்த போக்குடன் செயற்பட்டு வருவதை அனுமதிக்க முடியாது. எனவே, மலையக மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழி நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் கூட்டணிக்கு இது பெரும் பின்னடைவாக அமையும்.” – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஐக்கிய மக்கள் சக்தியுடன், பல சுற்று பேச்சுகளின் பின்னர் முக்கிய சில விடயங்களை முன்வைத்தே கூட்டணி அமைக்கப்பட்டது.
இதில், ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனங்களில் , தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு கட்டாயம் ஒரு இடம் ஒதுக்கப்படும் என்ற உறுதிமொழியும் வழங்கப்பட்டிருந்தது.
பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. நுவரெலியா, கண்டி, பதுளை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்றது.
அதேபோல இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் கூட்டணியின் வேட்பாளர்கள் குறிப்பிட்டுக்கூறக்கூடியளவுக்கு வாக்குகளைப் பெற்றனர். எனவே, தேசியப் பட்டியலை பெறுவதில் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு எல்லா விதத்திலும் உரிமை இருந்தது. மக்கள் ஆதரவும் கிட்டியது.
ஆனால் தேர்தலின் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தி எமக்கு வழங்கிய வாக்குறுதியை மீறியது. மக்கள் நலன்கருதி அமைதி காத்தோம். தேசியப்பட்டியலொன்று வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.
அதுவும் நடப்பதாக தெரியவில்லை. கூட்டணி என்ற போர்வையில் சரணாகதி அரசியல் நடத்துவதற்கு நான் தயாரில்லை. மக்கள் அதற்காக எனக்கு வாக்களிக்கவும் இல்லை.
தேசியப் பட்டியலை வென்றெடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆமை வேகத்தில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது. மக்களும் அதிருப்தியுடனேயே உள்ளனர்.” – என்றார்.