340 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரும் அறிவித்தல் இன்று புதன்கிழமை மாவட்ட செயலாளர்களால் வெளியிடப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பின்னர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் திகதி, இடம், பத்திரங்கள், வேட்பாளர்கள், பெண் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விஷயங்கள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் மார்ச் 20 ஆம் திகதிக்குள் நியமிக்கப்பட வேண்டும், அதற்கான தேர்தல் மார்ச் 10 க்கு முன்னதாக நடைபெற வேண்டும்.
அதன்படி மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.