ஜனாதிபதி மாற்றம் இலங்கையின் மனித உரிமை நிலவரங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான தனது வருடாந்த அறிக்கையினை வெளியிட்டுள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி இதனைத் தெரிவித்துள்ளார்.
பலவருடங்களாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டமை ஊழல் ஆகிய சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியதால் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மில்லியன் கணக்கானவர்களிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2022 இல் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளிற்கு இறங்கியிருந்தனர்.
நீண்டகாலமாக மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜூலையில் பதவி விலகினார்.
எனினும் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார், செயற்பாட்டாளர்களை கைதுசெய்தார், கடந்த கால குற்றங்களிற்கு நீதி வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை புறக்கணித்தார் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறல்களிற்கான வேண்டுகோள்களிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையால் பதிலளித்துள்ளார் என மீனாக்சி கங்குலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு உதவும் அதன் சர்வதேச சகாக்கள் அடிப்படை மனித உரிமைகள் சீர்திருத்தம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்றவற்றை வலியுறுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.