எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய அரபு அமீகரத்தில் நடைபெறவிருந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து அவுஸ்ரேலியா விலகியுள்ளது.
அரசாங்கம் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கிரிக்கெட் அவுஸ்ரேலியா இந்த முடிவினை எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மேலும் கட்டுப்பாடுகள் குறித்த ஆளும் தலிபான்களின் அறிவிப்பைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் அவுஸ்ரேலியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஆப்கானிஸ்தான் உட்பட உலகெங்கிலும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கான விளையாட்டை வளர்ப்பதற்கு கிரிக்கெட் அவுஸ்ரேலியா உறுதிபூண்டுள்ளது. மேலும், நாட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மேம்பட்ட நிலைமைகளை எதிர்பார்த்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் தொடர்ந்து ஈடுபடுவோம். இதற்காக நாங்கள் அவுஸ்ரேலிய அரசாங்கத்திற்கு நன்றி கூறுகிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசின் கொள்கைகளுக்கு எதிராக கிரிக்கெட் அவுஸ்ரேலியா கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது இது முதல் முறையல்ல.
செப்டம்பர் 2021இல் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு வந்த போது விளையாட்டில் பெண்கள் பங்கேற்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்ததால், அந்த ஆண்டு நவம்பரில் ஹோபார்ட்டில் நடைபெறவிருந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் அவுஸ்ரேலியா ரத்து செய்தது.