நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதானால், இதற்கென தேர்தல் ஆணைக்குழு கோரும் நிதியை கட்டம், கட்டமாகவே வழங்க முடியும் என திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான நிதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும் திறைசேரியின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதே அந்த அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழு விடுத்திருந்த வேண்டுகோளுக்கிணங்க திறைசேரியின் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா உள்ளிட்ட உறுப்பினர்களையும், ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது, திறைசேரியின் அதிகாரிகள் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நிதியை ஒதுக்கக் கூடிய முறைமை தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், திறைசேரியின் அதிகாரிகள், நிதியமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களிடம் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளனர்.