முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் சிறுவர் போராளிகளை இணைத்துக்கொண்டதாகவும் அனைத்து இனங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளை கண்மூடித்தனமாக கொலை செய்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கை இந்த கொடுமைகளை மூன்று தசாப்தங்களாக சகித்துக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கனடாவிற்கு முடிவெடுப்பதற்கு இறையாண்மை உரிமை இருந்தாலும் ஒருதலைப்பட்சமாகவும் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சி உள்ளிட்டவர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய கனடாவில் இவர்களுக்கு உள்ள அனைத்து சொத்துகளும் முடக்கப்படும் என்பதோடு அவர்கள் எந்த வகையிலும் நாட்டிற்குள் பிரவேசிக்க கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் தொடர்ந்தும் தண்டனையில் இருந்து தப்பிப்பதை கனடா ஒருபோதும் ஏற்காது என்ற செய்தியை இந்தத் தடைகள் எடுத்து காட்டுவதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா மற்றும் சர்வதேச சமூகம் தொடர்ந்து அழைப்பு விடுத்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கம் தனது மனித உரிமைக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.