உலகின் மிகப்பெரிய சுற்றுலா திட்டமாக கருதப்படும் ‘கங்கா விலாஸ் சொகுசு கப்பல் சுற்றுலா’வை பிரதமர் மோடி இன்று கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார். அத்துடன் கூடார நகரத்தையும் திறந்துவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின்போது, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு உள்நாட்டு நீர்வழி திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
இந்த சொகுசு கப்பல் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக, பங்களாதேஷ் சென்றடையும். மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பலில், 36 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க முடியும்.
வாரணாசியின் ரவிதாஸ் படித்துறையில் இருந்து பயணிக்கும் இந்த சொகுசு கப்பல் காசிப்பூர், பங்சார், பாட்னா வழியாக கொல்கத்தாவை அடைகிறது. பின்னர் பங்களாதேஷ் வழியாக மொத்தம் 3,200 கி.மீ. பயணம் செய்து அசாமின் திப்ருகரை மார்ச் 1ஆம் திகதி அடைகிறது.
‘கங்கா விலாஸ்’ எனப்படும் சொகுசு கப்பல் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த உல்லாச பயணத்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா இடங்கள் உள்ளடக்கப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் பங்களாதேஷில் பல்வேறு நதிகள் வழியாக இந்த கப்பல் பயணிக்கின்றது.