இலங்கைக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியக் கிரிக்கெட் அணி கைற்றியது.
கொல்கத்தா- ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 39.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நுவனிந்து பெனார்டோ 50 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மலிக் 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 216 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 43.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், இந்தியக் கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கே.எல் ராகுல் ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லஹிரு குமார மற்றும் சமிக்க கருணாரத்ன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, இந்திய அணி சார்பில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் தெரிவுசெய்யப்பட்டார்.