ஆசிய எழுவர் ரக்பி தொடரின் (Asia Rugby Emirates Sevens Series) இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்து வைத்து, இன்று (17) ‘ஏ’ பிரிவின் கீழ் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தை 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி த்ரில் வெற்றியடைந்துள்ளது.
இலங்கை நடத்தும் இத்தொடர் இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் (Racecourse) நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் இத்தொடரில் ஆசியாவின் முன்னனி அணிகள் பல பங்கேற்றுள்ளன.
இத்தொடரின் கீழ் இலங்கை அணி இன்று மேலும் இரு போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன்படி, இலங்கை அணி இன்று நண்பகல் 12.24 மணிக்கு ஹொங்கொங் அணிக்கு எதிராகவும், பிற்பகல் 4.04 மணிக்கு இந்திய அணிக்கு எதிராகவும் களம் காணவுள்ளது.
கடந்த வருடங்களில் தலா 8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில், இம்முறை ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் தலா 12 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















