கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் நீண்ட போருக்குப் பிறகு தங்கள் படைகள் கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது.
இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்ய துருப்புகளுக்கு ஊக்கமளிக்கும்.
ஆனால், இதை மறுத்துள்ள உக்ரைனிய அதிகாரிகள், சோலேடருக்கான சண்டை இன்னும் நடந்து வருவதாகக் கூறுகின்றனர்.
இந்த நகரம் ஒப்பீட்டளவில் சிறியது, போருக்கு முந்தைய மக்கள் தொகை வெறும் 10,000, மற்றும் அதன் மூலோபாய முக்கியத்துவம் விவாதத்திற்குரியது. ஆனால் ரஷ்யப் படைகள் அதைக் கைப்பற்றியது உறுதியானால், இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
வியாழனன்று 15 குழந்தைகள் உட்பட 559 பொதுமக்கள் சோலேடர் நகரில் தங்கியிருப்பதாகவும், அவர்களை வெளியேற்ற முடியவில்லை என்றும் பிராந்திய ஆளுநர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்தார்.