இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, மிக மோசமான வரலாற்று தோல்வியை சந்தித்தது.
ஒருநாள் கிரிக்கெட்டில் அணியொன்று அதிகப்பட்ச ஓட்ட வித்தியாசத்தில் (317 ஓட்டங்கள்) தோல்வியை தழுவியது இதுவே முதல்முறையாகும்.
திருவானந்தபுரம் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 390 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 166 ஓட்டங்களையும் சுப்மான் கில் 116 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் திமுத் கருணாரத்ன 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 391 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 22 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நுவனிந்து பெனார்டோ 19 ஓட்டங்களையும் கசுன் ராஜித 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 4 விக்கெட்டுகளையும் மொஹமட் ஷமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பெற்றுக்கொண்டனர்.
இப்போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோஹ்லி தெரிவுசெய்யப்பட்டார்.