கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தரப்பு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்காலப் பகுதியில் காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் , ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, காணி விடுவிப்பு கைவிடப்பட்டது.
அதன் பின்னர் ஜனாதிபதியாக கோட்டாபய பதவியேற்றதை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றாக கைவிடப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலர், முப்படைகளின்தளபதிகள், படைகளின் பிரதானி பங்குபற்றுதலுடன் யாழ் மாவட்ட செயலகத்தில் காணிவிடுவிப்பு தொடர்பில் விசேட கூட்டம் இடம்பெற்றிருந்த நிலையில், கீரிமலை, காங்கேசன் துறை , மயிலிட்டி , பலாலி வடக்கு ஆகிய பகுதிகளில் முப்படையினரின் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக படைத்தரப்பு ஜனாதிபதியின் முன் உறுதி அளித்தது.
குறித்த காணிகளில் 30 ஏக்கர் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலும் மிகுதி ராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இக்காணிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு காலப் பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட காணிகளே எனவும், புதிதாக காணிகள் எதனையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.