வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்கோரியும் புதிய வரிக்கொள்கையினை மீளப்பெறக்கோரியும் வைத்தியசாலைகளில் முன்பாக இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன்று நண்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து பதாகைகளுடன் ஊர்வலமாக வந்த வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியாளர்களே அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துகள் மற்றும் உபகரண தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கவும்,வான் உயர பணவீக்கம் நடுவீதியில் உத்தியோகத்தர்கள்,சுகாதாரதிற்கான ஒதுக்கீட்டில் கைவைக்காதே,நோயாளிகளின் உயிர்கள் ஆபத்தில்,இலசவ சுகாதாரம் இல்லாதொழிக்கப்படுகின்றது போன்ற சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவானது இரவு 10.00மணி வரையும் சேவையினை வழங்கும்போதும் அங்கு சிகிச்சைபெறுவதற்காக வரும் நோயாளிகளுக்கு மருத்து வழங்குவதில் பாரிய தட்டுப்பாடுகள் நிலவுவதாக இங்கு வைத்தியர்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன் வைத்தியசாலையில் குணமாக்கமுடியாத நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக நோயாளர்கள் பாரிய கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அரச வைத்தியசாலைகளை மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களே நாடி வரும் நிலையில் அவர்கள் கடும் கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.