13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, நாட்டில் அதிகாரப் பரவலாக்கலை மேற்கொண்டால், மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று இந்த நாடு வங்குரோத்து அடைந்துள்ளது. ஐ.எம்.எப். தொடர்பாக பேசுகிறோம். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பேசுகிறோம்.
ஆனால், கடந்த 6 மாதங்களில் இந்நாட்டில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.
இன்னும் 25 வருடங்களில் நாடு முன்னேறி விடும் என ஜனாதிபதி கூறிவருகிறார். இன்னும் 25 வருடங்களில் தற்போதைய ஜனாதிபதிக்கு 99 வயதாகிவிடும். எனக்கோ 97 வயதாகிவிடும்.
அதுவரை நாம் கடுமையான வாழ்க்கைச் சுமையைதான் சுமக்க வேண்டியிருக்கும். எமது எதிர்க்கால சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், ஜனாதிபதியோ குழம்பியக் குட்டையில் மீன் பிடிக்க முற்பட்டுக் கொண்டிருக்கிறார். 13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து இன்று பேசுகிறார்கள்.
தமிழ் மக்களும் சிங்கள மக்களும் இன்று உணவுக்கே சிரமப்படும் நிலையில், அரசியல் லாபத்தைத் தேடிக்கொள்ளத்தான் ஜனாதிபதி 13 குறித்து இன்று பேசி வருகிறார்.
முன்னாள் மாகாண முதல்வர்கள் அனைவரும் காணி – பொலிஸ் அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு கிடைப்பதை வரவேற்பதாக ஜனாதிபதி அன்மையில் தெரிவித்திருந்தார்.
இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். தெற்கிலுள்ள எந்தவொரு முதல்வரும் இவற்றை எதிர்ப்பார்த்தது கிடையாது.
வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடு இன்று இருக்கும் நிலைமையில் இவ்வாறான கோரிக்கைகளை விடுத்து பாவத்தை தேடிக்கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்.
13ஐ முழுமையாக கொடுப்பதாயின், அதிகாரத்தை பரவலாக்கல் செய்வதாயின், முதலில் இந்த நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றமடைய வேண்டும்.
இனவாதம் இந்நாட்டில் இருக்கும்போது, அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும்.
இரத்த ஆறு ஓடும். தெற்கு மக்கள் வடக்கு மக்களை குரோதத்துடன் பார்ப்பார்கள். தெற்கிலும் வடக்கிலும் மீண்டும் பிரச்சினைகள் ஏற்படும்.
எனவே, இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது என்று நான் ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.