பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல உள்ளூராட்சி சபை மற்றும் மஹியங்கனை உள்ளூராட்சி சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஹாலிஎல பிரதேச சபைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வழங்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம் மாவட்டத்தின் கல்னாவ உள்ளூராட்சி சபைக்கு ஹெலிகொப்டர் சின்னத்தில் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டதுடன், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதேவேளை, கந்தளாய் உள்ளூராட்சி சபைக்கு றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டம் சேருவில உள்ளூராட்சி சபைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சமர்ப்பித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு 10 அரசியல் கட்சிகள் மற்றும் 03 சுயேச்சைக் குழுக்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட மற்றும் கலவான உள்ளூராட்சி சபைகளுக்கு முன்னிலை சோசலிச கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட 06 வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.