பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எட்டாவது அத்தியாயம் (2023) எதிர்வரும் பெப்ரவரி 13ஆம் திகதி ஆரம்பமாகும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு இறுதிப் போட்டியாளர்களான லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் முல்தான் சுல்தான்ஸ் அணிகள், ஆரம்ப போட்டியில் முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் மோதும்.
கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் சுல்தான் அணியை 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து லாகூர் கலாண்டர்ஸ் முதல்முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.
இம்முறை 34 போட்டிகள் கொண்ட இத்தொடர், கராச்சி, லாகூர், முல்தான் மற்றும் பெஷாவர் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.
கராச்சி மற்றும் லாகூர் நகருக்கு செல்லும் முன் முல்தான் மற்றும் பெஷாவர் பெப்ரவரி 13 முதல் 26 வரை போட்டிகளை நடத்தும். தகுதிச் சுற்று, இரண்டு வெளியேற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி (மார்ச் 19) லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும்.
அடில் ரஷீத், மேத்யூ வேட், வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ஷ, ஜிம்மி நீஷம் மற்றும் டப்ரைஸ் ஷம்சி ஆகியோர் முதல் முறையாக இந்த தொடரில் விளையாடவுள்ளனர்.
மேலும், எதிர்காலத்தில் பாகிஸ்தான் மகளிர் லீக்கை ஆரம்பிப்பதற்கான முயற்சியில், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்கும் மூன்று கண்காட்சி போட்டிகளை ராவல்பிண்டியில் மார்ச் 8, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு மகளிர் அணிகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பார்கள்.