கரீபியன் தேசத்தில் தங்கள் பிடியை விரிவுபடுத்தும் ஆயுதமேந்திய கும்பல்களால் சக அதிகாரிகள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஹெய்டி பொலிஸார் வீதிகளைத் தடுத்து, நாட்டின் முக்கிய விமான நிலையத்திற்குள் நுழைந்தனர்.
பொலிஸ் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சிவில் உடையில் இருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலில் பிரதமர் ஏரியல் ஹென்றியின் உத்தியோகபூர்வ இல்லத்தைத் தாக்கினர்,
பின்னர் ஹென்றி அர்ஜென்டினாவுக்கு சென்று நாடு திரும்பி வந்து கொண்டிருந்தபோது விமான நிலையத்தை சுற்றிவளைத்து மற்றும் நுழைந்து போராட்டம் நடத்தினர்.
உள்ளூர் ஊடகங்களால் படம்பிடிக்கப்பட்ட ஒரு காணொளி, ஒரு குழு ஆண்கள், அவர்களில் சிலர் ‘பொலிஸ்’ என்று எழுதப்பட்ட சட்டைகளை அணிந்துகொண்டு, விமான நிலையத்தில் சீருடை அணிந்த அதிகாரிகளுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், பின்னர் போராட்டமின்றி அதிகாரிகளை கடந்து செல்வதையும் காட்டியது.
சக ஊழியர்கள் கிரிமினல் கும்பல்களால் கொல்லப்பட்டதற்கு, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கலவரத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
100க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளை மறித்து, டயர்களை எரித்தனர், பாதுகாப்பு கேமராக்களை உடைத்தனர் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர். போராட்டங்களை அடுத்து பல வணிக நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் நேற்று (வியாழக்கிழமை) மூடப்பட்டன.
பொலிஸ் நிலையங்கள் மீதான பல்வேறு கும்பல் தாக்குதல்களில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 14 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹெய்டிய பொலிஸ் அதிகாரிகளின் தேசிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஹெய்டியின் தேசிய பொலிஸ்துறையின் கூற்றுப்படி, புதன்கிழமை மட்டும் துப்பாக்கிச் சூட்டில் ஏழு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
2021ஆம் ஆண்டு ஹென்றி பதவிக்கு வந்ததில் இருந்து இதுவரை 78 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய வலையமைப்பான ஹெய்டியின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.