இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அமைச்சு அதிகாரிகள் ஆவணங்களில் கையொப்பமிட வற்புறுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி மனித உரிமை ஆணைக்குழு உடனான கலந்துரையாடலில் பங்குபற்றிய அதிகாரிகள் இரண்டு ஆவணங்களில் கையொப்பமிடுமாறு வற்புறுத்தப்பட்டதாக அமைச்சின் செயலாளரினால் தமக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஆவணங்களில் கையொப்பமிடத் தவறினால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஏற்கனவே சட்ட ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நடந்த நிகழ்வுகளை அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து குறித்து நேற்று காலை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், அரசியலமைப்பு பேரவைக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டமை தொடர்பாக விடுக்கப்பட்ட அழைப்பாணையைத் தொடர்ந்து மூன்று அதிகாரிகள் HRCSL இற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.