உள்நாட்டு இறைவரித் திணைக்கள சிரேஷ்ட ஆணையாளர் சட்டத்தரணி முத்துலிங்கம் கணேசராசா உள்நாட்டு இறைவரி பிரதி ஆணையாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு வெல்லாவெளியில் மூத்தாப்போடி மாணிக்கப்போடி பூசகர் குடும்பத்தில் முத்துலிங்கம் அன்னபூரணம் தம்பதியின் புதல்வரான இவர் மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வியையும் மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் உயர்கல்வியையும் கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் 1993ம் ஆண்டு திறந்த போட்டிப்பரீட்சை மூலம் இலங்கை இறைவரி சேவையில் வரிமதிப்பாளராக இணைந்துகொண்ட இவர் இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் (SLIDA), இலங்கை வியாபார முகாமைத்துவ நிறுவகம் (NIBM) போன்றவற்றில் டிப்ளோமா பட்டங்களையும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார்.
ஜனாதிபதி புலமைப்பரிசில் பெற்று கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மனிதவள முகாமைத்துவத்தில் வியாபார முகாமைத்துவ முதுமாணிப் பட்டம் மற்றும் இறைவரித்திணைக்கள புலமைப்பரிசில் மூலம் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் (PIM) “வரியியலில்” வியாபார முகாமைத்துவ முதுமாணிப்பட்டத்தையும் பெற்றுள்ள இவர் இலங்கை சட்டக்கல்லூரியில் பயின்ற ஒரு சட்டத்தரணியுமாவார்.
இலங்கை அரசு மற்றும் வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் மூலம் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பாகிஸ்தான், தென்கொரியா, பொட்ஸ்வானா, நெதர்லாந்து போன்ற பல நாடுகளில் பல தடவைகள் துறைசார் வெளிநாட்டு கற்கைநெறிகளையும் பயிற்சிகளையும் பெற்றுள்ள இவர் இலங்கை இறைவரிச் சேவையில் வரி மதிப்பாளர், சிரேஷ்ட வரிமதிப்பாளர், பொறுப்புவாய்ந்த சிரேஷ்ட வரிமதிப்பாளர், பிரதி ஆணையாளர், ஆணையாளர், சிரேஷ்ட ஆணையாளர் என படிப்படியாக பதவி உயர்வுகள் பெற்று நீண்டகாலம் கொழும்பு தலமையகத்தில் சிறப்பாக சேவையாற்றிய இவர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒருசேர இரு பிராந்திய பணிமனைகளிலும் ஆணையாளராக சிறப்புற நிருவாகம் செய்த பெருமையையும் பெற்றுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் “வரி முகாமைத்துவம்” எனும் பாட நெறியை பல வருடங்களாக கற்பிக்கும் வருகை விரிவுரையாளரான இவர் தனது துறைசார் தொழிலுக்கும் அப்பால் கிழக்குப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர், மட்டக்களப்பு பிரசைகள் அமைப்பின் துணைத் தலைவர் மற்றும் சர்வதேச ரோட்டரிக் கழகம், மட்டக்களப்பு கேன்ஸர் அமைப்பு, விவேகானந்த நற்பணி மன்றம், மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கம், வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய அறங்காவலர் சபை போன்றவற்றினூடாக பல்வேறு சமூகப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து இலங்கை இறைவரிச் சேவையில் “பிரதி ஆணையாளர் நாயகம்” எனும் பதவியைப் பெற்ற முதலாவது தமிழர் இவரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.